சேலத்தில் இன்று முதல் அமர்நாத் பனிலிங்க தரிசனம்
சேலம்: அமர்நாத் பனிலிங்க தரிசனம் மற்றும் பொருட்காட்சி, ஜவகர் மில் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இதுகுறித்து, சென்னையை சேர்ந்த விஜயவேலு கூறியதாவது: அமர்நாத் பனி லிங்கத்தை, சேலம் மாவட்ட மக்களும் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக, மூன்று ரோடு, ஜவகர் மில் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தரிசனம், இன்று துவங்கி, 52 நாள் நடக்கிறது. 80 அடி உயரம், 350 அடி நீளம், 200 அடி அகலத்தில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சேஸ்நாத்ஜி எனப்படும், ஏழு தலைகள் கொண்ட, பிரம்மாண்டமான நாகம் நுழைவாயில், தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அமர்நாத்தில் உள்ளதுபோன்ற, ஒன்பது வளைவுகள், 3 நீர்வீழ்ச்சிகள், மலைப்பாதை, ஆறுகள் அமைக்கப்பட்டுள்ளன. பனி பிரதேசத்தில் மட்டும் காணப்படும் யாக் மாடு, மான் போன்ற மிருக பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது. பனிலிங்கத்துக்கு தினமும் பூஜை செய்து, பிரசாதம் வழங்கப்படும். தரிசனம் காலை, 11 முதல் இரவு, 10 மணி வரை நடக்கும். பொருட்காட்சியில், பலவித அரங்குகள், பொழுதுபோக்க மற்றும் விளையாடி மகிழ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.