உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிக செப்பேடுகளை வழங்கிய ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்!

அதிக செப்பேடுகளை வழங்கிய ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்!

ராமநாதபுரம் :ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கோயில் கொடை, மக்கள் குடியேற்றம், நில விற்பனை போன்றவைக்காக அதிகளவில் செப்பேடுகளை வழங்கி உள்ளனர். செப்பேடுகள் மூலம் அவர்களின் அரசியல் பொருளியல், நீதி, நிர்வாகம், சமயம், சமுதாயம், தொழில்கள், குற்றங்கள், தண்டனைகள், நீர்நிலைகளை அறிய முடிகிறது. இதுவரை சேதுபதிகளின் 110 செப்பேடுகள் கண்டறியப்பட்டன. இவை கோயில்கள், பள்ளிவாசல், ஆலயம், சத்திரம், சைவ மடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.மேலும் சென்னை அருங்காட்சியகம், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அகழ் வைப்பகத்திலும் சில செப்பேடுகள் உள்ளன. இவை நீள்சதுரம், செவ்வக வடிவில் உள்ளன. கிராந்த எழுத்துக்கள் கலந்த தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தெலுங்கில் சேதுபதி மன்னர்களின் கையொப்பம் உள்ளது.

சிலவற்றில் கோட்டு உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை சேதுபதி மன்னர்கள், அவர்களது அரசியல் அலுவலர்கள் வழங்கியுள்ளனர். பெரும்பாலானவை கோயில்களுக்கு கொடுத்த கொடையை பற்றியதாக உள்ளன. சில செப்பேடுகள் உரிமை சிக்கல்களை தீர்த்தல், கொலை வழக்கு, காணியாட்சி, மக்கள் குடியேற்றம், நில விற்பனை, பெண்களை சிறை எடுத்தல், முத்துக்குளித்தல் தொடர்புடையதாகவும் உள்ளன. ராமநாதபுரம் அகழ்வைப்பக காப்பாட்சியர் சக்திவேல் கூறியதாவது: ஒவ்வொரு செப்பேட்டிலும் மங்கலச்சொல், காலக்குறிப்பு, மெய்க்கீர்த்தி, செப்பேட்டு செய்தி, தானத்தை காக்கும்படியாக சொல்லப்பட்ட ஓம்படைக்கிளவி ஆகியவை ஒன்றோடு ஒன்றாக எழுதப்பட்டு உள்ளன. சேதுபதி மன்னர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கே அதிகளவில் செப்பேடுகளை வழங்கியுள்ளனர். திருப்புல்லாணி, பெருவயல், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, ராமநாதபுரம், சிதம்பரம், திருவாரூர், பழநி, அழகர்கோவில், திருப்பெருந்துறை கோயில்களுக்கும் அறக்கொடைகள் அளித்து செப்பேடுகளை எழுதி கொடுத்துள்ளனர். ராமநாதபுரம், புதுமடம், ஏர்வாடி, ராமேஸ்வரம், கீழக்கரை பகுதி பள்ளிவாசல்களுக்கும் செப்பேடுகள் வழங்கியுள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !