திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா அபிஷேகம்
திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா அபிஷேகம், நாளை இரவு, 9:00 மணியளவில், நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில், வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதலாவதான ரத்தின சபை திருத்தலம் இது.ஸ்தல வரலாறுதிருவாலங்காட்டில் அனந்த முனிவர், சிவபெருமான் திருநடனம் புரிய வேண்டி, தவம் புரிந்தார். முடி மீது முஞ்சம் புற்கள் (ஒரு வகை நாணல் புல்) முளைத்தது. அதனால் அனந்த முனிவர், மூஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். அந்த முனிவரின் வேண்டுகோளால், சிவபெருமான், ஊர்த்துவ தாண்டவம் ஆடியதாக, கோவில் வரலாறு கூறுகிறது.அதே போல், சிவபெருமான் திருக்கரத்தில், கார்க்கோடகன் என்ற பாம்பு, ஒருநாள் இறைவன் திருக்கரத்தில் நஞ்சைக் கக்கியது. அக்குற்றத்திற்காக இறைவன் அதை, திருவாலங்காட்டை அடைந்து, தவம் செய்யுமாறு பணித்தார்.அதன்படியே கார்க்கோடகனும் திருவாலங்காட்டை அடைந்து தவம் செய்து, சாப விமோசனம் பெற்றதாகவும், கோவில் வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது.
திருவாதிரை நட்சத்திரத்தில்...: ஒரு சமயம், நடனக் கலையில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்வி எழுந்ததும், வடாரண்ய ஈஸ்வரரும், பத்ரகாளியும் நடனப் போட்டியில் ஈடுபட்டனர். அப்போட்டிக்கு நடுவர்களாக, மூஞ்சிகேச முனிவரும், கார்க்கோடகனும் இருந்தனர்.பிரபஞ்சமே அதிரும்படியாக பதினாறு தாண்டவங்களை இருவருமே சம அளவில் ஆடினர். இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பதினேழாவது தாண்டவமாக, சிவபெருமான் கீழே விழுந்த காது குண்டலத்தை, தனது ஒற்றைக் காலில் எடுத்துக் காதில் அணிந்தார். ஆனால், காளியால் அவ்வாறு ஆட முடியாமல், தலை குனிந்தாள். காளியை வெற்றி கொண்ட தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என, அழைக்கப்பட்டு, சிவபெருமான், முதல் திருநடனம் புரிந்த ரத்தின சபையாக அது அழைக்கப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம்: இப்படி சிறப்பு வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதை ஆருத்ரா தரிசனம் என, அழைக்கின்றனர்.சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் என, கூறப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரம் குருதியை போல செந்நிறமாக இருக்கும். அதற்கு ருத்ரதேவா என்பது பெயர். அந்த நட்சத்திரத்திற்கு மூன்று கண்களும், இரண்டு கைகளும் உண்டு. அதற்குரிய வாகனம் ரிஷபம். உக்ர சுபாவம் உடையது, மேல்நோக்கு பார்வை என, நட்சத்திர சூடாமணி என்ற நுாலில், வல்லபாச்சாரியார் குறிப்பிடுகிறார்.
ஆருத்ரா என்பதில், ருத்ரா என்ற சொல்லுக்கு, ருத்ரன் - சிவன் என்பது பொருள். சித்தியளிக்கும் சிவநெறி என்ற நுாலில் (பக்கம் 95) சிதம்பரம், மதுரை, நெல்லை, திருஆலங்காடு போன்ற புகழ் பெற்ற கோவில்களில் இருந்து, திருவாதிரை விரதம் கொள்வது மிகவும் சிறப்பாகும் என, நுாலாசிரியர் புலியூர் கேசிகன் குறிப்பிடுகிறார்.சிவபெருமான் ஆதிரை முதல்வன் என, அழைக்கப்படுகிறார். நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில், விளாம்பழம் சுவாமி திருமேனியில் சார்த்தப்பட்டு, அதன் மீது மாதுளை முத்துக்கள் சார்த்தப்படும். அதைப் பார்க்கும்போது, நடராஜப் பெருமான் மீது, ரத்தின கற்கள் பதித்துள்ளது போல் இருக்கும். இப்படி சிறப்பு வாய்ந்த ஆருத்ரா அபிஷேகம், நாளை இரவு 9:00 மணிக்கு துவங்கி, இரவு முழுவதும் நடைபெற உள்ளது.
ஆருத்ரா தரிசனத்தன்று நடப்பது என்ன?
கோவிலில் தல விருட்சமாக, பிரமாண்டமான ஆல மரத்தடியில் தான் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். இரவு, 9:00 மணிஅளவில், ரத்தின சபாபதி பெருமான், ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். சுமார் 9.30 மணியளவில், அபிஷேகம் தொடங்கி, விடியற்காலை, 4:00 மணி வரை, வெகு சிறப்பாக நடைபெறும்.பின், அலங்காரம் செய்யப்பெற்று, அதிகாலை, 5:00 மணியளவில், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, ஆலமர பிரகாரம் வலம் வந்து, கோபுர தரிசனம் முடிந்ததும், சன்னிதி வீதியில் உள்ள, திருக்கண் சாத்த விநாயகர் முன், தீபாராதனையை ஏற்றுவர். பின், ஆலயம் திரும்பி, பிரதோஷ நந்திதேவர் பக்கமுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இறங்குவார்.பின், வெள்ளை சாத்துபடி ஏற்றுக் கொள்வார் (அப்போது, நடராஜர் மற்றும் அம்பாளுக்கு முகம் தவிர மற்ற அங்கங்கள் முழுவதும் வெள்ளை வஸ்திரத்தால் மூடப்பட்டிருக்கும்). அதன்பின், துவஜஸ்தம்பத்தை வலம் வந்து, பழைய ஆருத்ரா மண்டபத்திற்குக் கீழே இறங்கி, வெள்ளை சாத்துபடி கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அனுக்கிரக தரிசனம்: வரும் 26ம் தேதி சனிக்கிழமை, விபூதி மற்றும் திருச்சாந்து (மை) பிரசாதமாக வழங்கப்படும். காலை, 8:00 மணியளவில், ஆலயத்திற்கு வெளியே உள்ள மண்டபத்தில், வஸ்த்ர மண்டபம் அமைக்கப் பெற்று, முதலில் பழையனுார் புறப்பட்டு சென்று, மூன்று வீதிகளில் வலம் வந்து, பகல், 1:00 மணியளவில், 16 கால் மண்டபத்திற்கு நடராஜர் வருவார். அப்போது, கற்பூர ஜோதி (அகண்ட) தீபாராதனை நடைபெறும். மும்முறை நடராஜ மூர்த்தி தன்வலம் வருவார். இதுவே அனுக்கிரக தரிசனம் எனப்படும்.பின், ராஜகோபுர பிரகாரத்தை வலம் வந்து, ஆருத்ரா மண்டபத்தின் அருகே வந்து, தன் ரத்தின சபையை பார்த்தவாறு நிற்பார். தீபாராதனை ஏற்றுக் கொண்ட பின், ஆலமர பிரகார வலம் வந்து, மீண்டும் ஆருத்ரா மண்டபத்திற்கு வந்து, எதிரே உள்ள (திருக்கண்ணாடிக்கு முன்பாக உள்ள) திருநந்தி தேவரைப் பார்த்தவாறு, ரத்தின சபைக்கு எதிரே, கீழே இறங்குவார். மறுநாள் காலை, சாந்தி அபிஷேகம் நடைபெறும். பகல், 12:00 மணியளவில், தன் ரத்தின சபைக்கு செல்வார். அங்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பெற்று, மகா தீபாராதனை நடைபெறும்.
நான், 50 ஆண்டுகளாக ஆருத்ரா அபிஷேகத்தில், நடராஜப் பெருமானுக்கு இரவு 9:00 மணி முதல், அதிகாலை 4:00 மணி வரை, பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து வருகிறேன். இதுதவிர, ஆண்டின் ஆறு நாட்கள் நடராஜப் பெருமானுக்கு நடக்கும் சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை (ஆருத்ரா), மாசி வளர்பிறை சதுர்த்தசி போன்ற அபிஷேகங்களும் நடத்தி வருகிறேன். தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் ஆருத்ரா அபிஷேகம், தொடர்ந்து 7 மணி நேரம் நடக்காது. திருவாலங்காட்டில் தான், ஆருத்ரா தரிசனம், 7 மணி நேரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. வரும், 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு, நடக்க இருக்கும் ஆருத்ரா அபிஷேகம், என், 51வது ஆண்டு அபிஷேகமாகும். -எம்.சுப்பிரமணிய குருக்கள், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
கோவிலில் நடைபெறும் அபிஷேகங்களும் பலன்களும்
அபிஷேகம் பலன்கள்
விபூதி ஐஸ்வர்யம் பெருகும்
நல்லெண்ணெய் சுகம்
சீயக்காய் துாள் மன சுத்தி
கதம்பத்துாள் சரீர நோய் விலகல்
நெல்லிப்பொடி வியாதி நீங்கும்
வில்வப்பொடி மூன்று ஜென்ம பாவம் விலகல்
பச்சரிசி மாவு கடன் நிவர்த்தி
நாட்டு சர்க்கரை வாழ்வில் இனிமை சேரும்
எலுமிச்சம் பழச்சாறு எம பயம் நீக்கம்
சாத்துக்குடி (10 - 22 வரை) சகல நலன்கள், வாழ்வில் இனிமை
கமலா பழம்
அன்னாசி பழம்
கருப்பு திராட்சை
பச்சை திராட்சை
ஆப்பிள்
கொய்யாப்பழம்
விளாம்பழம் + மாதுளை
தமரத்தம் பழம்
நாரத்தம் பழம்
மாம்பழம்
பலாப்பழம்
வாழைப்பழம் (பச்சை, கற்பூர, பூவன் மற்றும் செவ்வாழை)
கரும்புச்சாறு பிணி நீக்கம்
பஞ்சாமிர்தம் செயலில் வெற்றி
பால் பாவங்கள் விலகல்
தயிர் புத்திர பாக்கியம்
இளநீர் இல்லற சுகம்,குடும்ப ஒற்றுமை
தேன் குரல் வளம்,
ஜன வசீகரம்
சந்தனம் லட்சுமிகரம்
பன்னீர் வறுமை நீங்கி வளம் பெறுதல்
சொர்ணாபிஷேகம் குபேரனருள் கிட்டும், செல்வம் பெருகும்
கலச அபிஷேகம் செய்த குற்றம் மறையும்
புஷ்பாஞ்சலி சந்தோஷம்
ஆருத்ரா விழா - நிகழ்ச்சி நிரல்
நேரம் நிகழ்ச்சி:
25ம் தேதி
அதிகாலை 4:30 தனுர்மாத அலங்காரம், பூஜை காலை 7:30 காலசந்தி பூஜை
காலை 9:00 சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மன் உற்சவர், விநாயகர், மணிக்கவாசகர் ஆகிய நான்கு சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் பழையனுார், திருவாலங்காடு முக்கிய வீதிகளில் வீதியுலா
மதியம் 1:00 நான்கு சுவாமிகளும், கோவில் வளாகத்திற்கு திரும்பி வந்து, திருவெம்பாவை பாடி முடித்தல்
இரவு 9:00 ஆருத்ரா அபிஷேகம் தொடங்குதல்
26ம் தேதி
அதிகாலை 4:00 ஆருத்ரா அபிஷேகம் முடிந்து, வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை
அதிகாலை 5:00 நடராஜப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோபுரம் முன் எழுந்தருளல் மற்றும் கோபுர தரிசனம்
காலை 6:00 திருச்சாத்து விநாயகருக்கு முதல் தீபாராதனை, வெள்ளை சாத்துபடி
காலை 9:00 உற்சவர் நடராஜப் பெருமான் பழையனுார், திருவாலங்காடு முக்கிய வீதிகளில் வீதியுலா
பகல் 1:30 உற்சவர் நடராஜப் பெருமான் கோவில் வளாகத்திற்கு வருதல், அனுகிரக தரிசனம்
27ம் தேதி
காலை 9:00 சாந்தி அபிஷேகத்துடன், மூன்று நாட்கள் ஆருத்ரா விழா நிறைவு
சிறப்பு டிக்கெட்டுகள்: கோவில் பின்புறமுள்ள ஆலமரத்தடியில், இரவு முழுவதும் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகத்தை, 2,500 பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் நுழைவாயில் மற்றும் ஆலமரத்தின் எதிரில் உள்ள வளாகத்தில், வண்ண தொலைக்காட்சிகளில், அபிஷேகத்தை பக்தர்கள் பார்க்கும் வகையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் வசதிக்காக, திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருவாலங்காடு ரயில் நிலையங்களிலிருந்து, கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அபிஷேகத்தை பார்ப்பதற்கு, சிறப்பு டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.