உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரர் குருபூஜை விழா

திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரர் குருபூஜை விழா

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுந்தரர் குருபூஜை விழா இரு நாட்கள் நடந்தது. கடந்த 5ம் தேதி காலை 8 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், சிவபெருமான் சுந்தரர் தனக்கடிமை என அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சுந்தரருக்கு குருபூஜைவிழாவும் நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் லிங்கம் அமைத்து மகேசுவரபூஜையும், மதியம் 1 மணிக்கு அருளாளர் சுந்தரர் அருட்சபையினர் சார்பில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக 10.30 மணிக்கு மெய்கண்டார் சைவசித்தாந்த பயிற்சி மையத்தை சேர்ந்த பக்தர்கள் "சுந்தரர் முற்றோதல் நடத்தினர். மாலை 3 மணிக்கு சிவதீர்த்தத்தில் சுந்தரர் முதலை வாயிலிருந்து பிள்ளையெடுக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு சுந்தரர் வெள்ளையானையின் மீது வீதியுலாவும், நள்ளிரவு 1 மணிக்கு சேரமான்பெருமானுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேல், டி.எஸ்.பி., முருகேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கலைவாணன், ரவி குருக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !