சபரிமலை நடை இன்று திறப்பு: ஜன.18 வரை நெய் அபிஷேகம்!
சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. 20 நாட்கள் நடை திறந்திருக்கும். ஜன.,18 வரை நெய் அபிஷேகம் நடக்கும்.மண்டலகால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை டிச., 27 இரவு ௧௦ மணிக்கு அடைக்கப்பட்டது. பக்தர்கள் மலையேறுவது தடை செய்யப்பட்டு, மகரவிளக்கு காலத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை ௫ மணிக்கு நடை திறக்கிறது. மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் நடக்காது; இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 3மணிக்கு நடை திறந்ததும் மகரவிளக்கு கால பூஜைகள் ஆரம்பமாகும். பின், 3.15 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். தொடர்ந்து கணபதி யாகம், பூஜைகள் நடக்கும். ஜன., 18- வரை எல்லா நாட்களிலும் அதிகாலை 3.15 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நெய் அபிஷேகம் நடக்கும். ஜன., 15ல் மகரவிளக்கு பெரு விழா நடக்கும். இந்த நாளில், சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் மகர சங்கரம பூஜை நடக்கிறது. ஜன.,19 இரவு வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம்.அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கும். ஜன.,20 காலை 7மணிக்கு நடை அடைக்கும் போது, மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெறும்.