சபரிமலையில் ஜன.12ல் எருமேலி பேட்டைதுள்ளல்!
சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டைதுள்ளல் ஜன.,12ல் நடக்கிறது. ஜன.,13ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் ஜன.,12ல் மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் தொடங்கியுள்ளன.
மகரவிளக்கு நாளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நேற்று சன்னிதானத்தில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா ஆலோசனை நடத்தினர்.சில ஆண்டுகளுக்கு முன் நடந்த புல்மேடு விபத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடக்கின்றன.மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் சன்னிதானத்தில் மட்டும் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கும் அனுப்பி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. மகரவிளக்குக்கு முன்னோடியாக ஜன.,12ல் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர்.ஜன.,13-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உச்ச பூஜைக்கு பின், பவனி புறப்படும்.ஐயப்பனை, மகனாக வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணங்களுடன், தந்தை மகனை காணச் செல்வதாக இதன் ஐதீகம். தற்போது, திருவாபரணம் கொண்டு வரும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.