உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 25 ஆயிரம் ருத்ராட்ச சிவ சிம்மாசனத்தில் ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

25 ஆயிரம் ருத்ராட்ச சிவ சிம்மாசனத்தில் ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

விருத்தாசலம்: ராகு – கேது பெயர்ச்சியொட்டி, விருத்தாசலத்தில் 25 ஆயிரம் ருத்ராட்சத சிவ சிம்மாசனம், 3 அடி உயர மரகத விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரங்களில் முக்கியமான ராகு – கேது பகவான், நேற்று பகல் 12:37 மணிக்கு பெயர்ச்சியடைந்தனர். அதன்படி, கன்னி ராசியிலிருந்து சிம்மத்திற்கு ராகுவும், மீனம் ராசியிலிருந்து கும்பத்திற்கு கேதுவும் பெயர்ந்தனர். இதையொட்டி, பெயர்ச்சியடைந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள், ராகு, கேது பகவான்களுக்கு கொள்ளு சாதம், உளுந்து சாதம் நெய்வேதியமாக வைத்து, நெய், எள் தீபமிட்டு வழிபட்டனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் திருக்கயிலாய தெய்வீகப் பேரவை சார்பில் அய்யனார் கோவில் தெருவில் உள்ள திருமுதுகுன்றம் மண்டபத்தில், மரகதலிங்க தரிசன நிகழ்ச்சி துவங்கி, வரும் நாளை 10ம் தேதி வரை நடக்கிறது. இதனை, நகராட்சித் தலைவர் அருளழகன், துணை சேர்மன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அதில், 25 ஆயிரம் ருத்ராட்சத நவரத்தின சிவ சிம்மாசனம், 15 ஆயிரம் ருத்ராட்சத சிவலிங்கம், 3 அடி மரகத விநாயகர் (ஒற்றைக்கல்), பஞ்சலோக பிரித்தியங்கரா தேவி, ஸ்ரீ சக்கரம், ஸ்படிக லிங்கம், வைடூரிய கண், வெள்ளிக்கவச வலம்புரி சங்குகள், 23 முக ருத்ராட்சம், ஐந்து தலை நாகலிங்கம், ஸ்படிக விநாயகர், மரகத லிங்கம், அபூர்வ சிறிய தேங்காய் மாலை, மூலிகை மர நாகம் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு – கேது பகவானுக்கு பகல் 12:37 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !