பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மூலம் நிகும்பலா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் அமைந்துள்ள, பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன் மற்றும் தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடந்தது. பத்ரகாளியம்மன், பெரியாண்டச்சி அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் குங்குமம் கொண்டு ஆயிரம் நாமார்ச்சனை பஜனைகள் செய்தனர். நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தி, மகா தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த மிளகாய் வற்றல் யாகத்தில், நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் பத்ரகாளியம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.