சிதம்பரம், கிள்ளையில் அனுமன் ஜெயந்தி விழா!
சிதம்பரம்: சிதம்பரத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி கீழவீதி வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனுமன் ஜெயந்தியையொட்டி வீர ஆஞ்சநேயருக்கு நேற்று முன்தினம் 108 லிட்டர் பால், மஞ்சள் பொடி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது.
சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மாலை, மலர் அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிள்ளை: பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மூல நட்சத்திரம் மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அனுமன் ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் காலை திருப்பூட்டு நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு விசேஷ அலங்காரம் 12:45 மணிக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக் கவசத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு வெங்கட்ராயர் பரம்பரை முரளி தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமன பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டை: சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 6:00 மணிக்கு சூரியதரிசனம் நடந்தது. இரவு ஆஞ்ச÷ நயர் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை வரதராஜ பட்டாச்சாரியார் செய்தார். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் தலைவர் பிரபாகரன் செய்திருந்தார்.