புதியதோர் உலகம் செய்வோம்! (மகான் விவேகானந்தர்)
*உயர்ந்த லட்சியம், உறுதியான மனநிலை ஆகிய இரண்டும் பெற்றவர்கள் உலகையே புதிதாய் மாற்றி சரித்திரம் படைப்பது உறுதி. அவர்களை இந்த உலகமே போற்றி வணங்கும்.
*கருணை கொண்ட மனமே இனிய சொர்க்கம். உதவும் மனப்பான்மையோடு பிறருக்கு கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.
*உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்கவோ, துன்பப்படுத்தவோ முடியாது. தன்னலத்தை ஒழித்தால் தான் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
*மிகப் பெரிய பலவீனத்தையும் கூட பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாற்றி விட முடியும். உங்களின் குறை, தவறைக் கூட பெரும்பேறாக கருதுங்கள்.
*சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைய முடியாது. சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணி வேர்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*உங்களுக்குப் பிடித்ததை செய்ய விரும்புவது போல மற்றவர்களையும் அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய அனுமதியுங்கள்.
*எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள். யாருடைய வலையிலும் சிக்கி விடாமல் விழிப்புடன் இருங்கள்.
*அதிகாரம் செலுத்த விரும்பினால் முதலில் கீழ்ப்படிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள். தலைமை வகிப்பவர்கள் முதலில் பணிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
*ஒவ்வொருவரின் விதியும் அவரவர் கையில் தான் இருக்கிறது. விதையின் சக்தி மரமாக வளர்வது போல, மனதின் சக்தியே நம் வாழ்க்கையாக மலர்கிறது.
*உங்கள் மீது முழுநம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையின் மீது எழுந்து நில்லுங்கள். வலிமையுடையவர்களாக இருங்கள். வாழ்விற்கு தேவையானது இதுவே.
*மகத்தான செயல் எதையும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடியாது. பொறுப்புணர்ச்சியும், பொறுமையும் கொண்டவர்கள் உழைப்பின் உதவியால் வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.
*யார் எது சொன்னாலும் கேட்டுக் கொள்ளுங்கள். சரி என்று கூடச் சொல்லுங்கள். ஆனால் உங்களின் சொந்தக் கருத்தில் நிலைத்து நில்லுங்கள்.
*யார் மீதும் குற்றம் சுமத்துவது எளிது. ஆனால் குணத்தை அறிந்து பாராட்டுவது எல்லோராலும் இயலாத விஷயமாகும்.
*பலவீனப்படுத்தும் எந்த விஷயத்தையும் விஷம் போல உதறித் தள்ளி விடுங்கள். அது உடல், மனம், ஆன்மிகம் சார்ந்த எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
*ஒரு துளி செயல் என்பது இருபதாயிரம் வெற்றுப் பேச்சுகளை விட மேலானது. அதனால் பேச்சை புறந்தள்ளி விட்டு செயலில் முழுமூச்சாக ஈடுபடுங்கள்.
*யாரையும் சார்ந்து வாழ நினைப்பது கூடாது. பிறரிடம் இருந்து கிடைக்கும் உதவியை மறுப்பவன் எந்த நிலையிலும் சுதந்திரமாக வாழ முடியும்.