உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உற்சாக பொங்கல்.. கடைவீதிகளில் களை கட்டியது விற்பனை:கல்லூரிகளில் ஆடிப்பாடி கொண்டாட்டம்!

உற்சாக பொங்கல்.. கடைவீதிகளில் களை கட்டியது விற்பனை:கல்லூரிகளில் ஆடிப்பாடி கொண்டாட்டம்!

கோவை: கோவையில் பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது. கடைவீதிகளில், கரும்பு, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவாரம்பூ விற்பனை, அமோகமாக நடக்கிறது. கல்லுாரிகளில், மாணவ, மாணவியர், ஆடிப்பாடி, பொங்கல் விழாவை கொண்டாடினர். விவசாயிகள், பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில், முதல் அறுவடையை தங்கள் குலதெய்வத்துக்கும், சூரிய பகவானுக்கும் படைக்கின்றனர். இதுவே பொங்கல் திருநாள். தை திருநாளில் புது அரிசியில் சர்க்கரை பொங்கலிட்டு, முக்கனிகளுடன், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவை கொண்டு சூரிய பகவானுக்கு படையல் வைக்கின்றனர்.

பொங்கல் திருநாள் நெருங்கிய நிலையில், கோவையில் பண்டிகை உற்சாகம் களை கட்டியுள்ளது. கடைவீதிகளில், ஜவுளி மற்றும் பொருட்கள் விற்பனைக்காக, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, மாவிலை, ஆவாரம்பூ விற்பனை அமோகமாக நடக்கிறது.கடந்த ஆண்டுகளில், 50 மஞ்சள் கொத்து அடங்கிய கட்டின் விலை, 120 முதல், 150 ரூபாய் விற்பனையானது. தற்போது கட்டு விலை, 350 முதல், 400 ரூபாய் வரை விற்பனையாகிறது.ஒரு மஞ்சள் கொத்து, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஜோடி மஞ்சள் கொத்து, 50 ரூபாயாக உள்ளது.

உக்கடம் மார்க்கெட்டில், கரும்பு விற்பனை ஜோராக நடக்கிறது. பத்து கரும்புகள் கொண்ட கட்டு, 500 முதல், 700 ரூபாய் வரையிலும், 15 கரும்புகள் கொண்ட கட்டு, 600 முதல் 800 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. ஒரு கரும்பு, 50 முதல் 80 ரூபாய் வரையும், ஜோடி, 75 முதல் 160 ரூபாய் வரையிலும் விற்பனைக்கு உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முன் காப்புக் கட்டுவதற்காக, வேப்பிலை, மாவிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ பயன்படுத்துவர். பூளைப்பூ கட்டு ஏழு முதல், 10 ரூபாய், வேப்பிலை கட்டு ஐந்து ரூபாய், மாவிலை கட்டு, 10 ரூபாய்க்கும், ஆவாரம் பூ, 10 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. பொங்கலன்று பச்சரிசிக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானதாக இருப்பது உருண்டை வெல்லம். சேலம், நெய்காரன்பட்டி (பழனி), தாராபுரம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, கோவைக்கு விற்பனைக்காக வெல்லம் கொண்டு வரப்படுகிறது.

மொத்த விற்பனை கடையில் நெய்காரன்பட்டி வெல்லம் கிலோ, 50 ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில், 60 முதல், 85 ரூபாய் வரையும், சேலம் வெல்லம், 55 ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில், 65 முதல் 74 ரூபாய் வரையும், மறையூர் வெல்லம், 65 ரூபாய்க்கும், விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கோவையில், பள்ளி, கல்லுாரிகளிலும் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய உடையணிந்த மாணவ, மாணவியர், பொங்கல் வைத்து, குலவையிட்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !