திருவண்ணாமலையில் அமர்வு தரிசனம்ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் அமர்வு தரிசனத்திற்கு, 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம் என இணை ஆணையர் கூறினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்க இலவச தரிசனம், 20ரூபாய் கட்டண தரிசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பவுர்ணமி நாட்களில் மட்டும், 50 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தினமும், சுவாமி மற்றும் அம்மனுக்கு நடக்கும் அபிஷேக காலத்தில், அமர்வு தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யும் நேரத்திற்கும், இலவசமாக தரிசனம் செய்யும் நேரத்திற்கும் சிறிய அளவிலான கால இடைவெளியே உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
இவர்கள் வசதிக்காக, பவுர்ணமி நாட்களில், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி சுவாமி சன்னிதியில், முதல் பிரகாரத்தில் துர்க்கையம்மன் கேட் வழியாகயும், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மனை தரிசிக்க, சண்டிகேஸ்வரி அம்மன் கேட் வழியாக அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சாதாரண நாட்களில் அபிஷேகம் அல்லாத நேரத்தில், சுவாமி சன்னிதி மற்றும் அம்மன் சன்னிதியில் அமர்வு தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்துக்கான புதிய நடைமுறைகள் மற்றும் கட்டணத்தை முறைப்படுத்துதல் தொடர்பாக, பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வரும், 31ம் தேதிக்குள், எழுத்து மூலமாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என, கோவில் இணை ஆணையர் தெரிவித்தார்.