கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி தைப்பூச விழா துவங்கி, மூன்று நாள் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக, நேற்று கொடியேற்று விழா நடந்தது. இதில், காலை, 9:30 மணி முதல் கலச தீர்த்தங்கள் வைத்து, யாக பூஜை செய்யப்பட்டது. காலை, 11:40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின், கொடி மரத்துக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இதில், பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், கலச தீர்த்தங்கள் கொடி மரத்துக்கு ஊற்றப்பட்டது. மூலவர் வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜை செய்து, ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் வெண்மணி மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.