நாட்டரசன்கோட்டையில் இன்று ‘செவ்வாய் பொங்கல்’ :நகரத்தார் சங்கமிக்கும் விழா
சிவகங்கை: சிவகங்கை நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் இன்று ‘செவ்வாய் பொங்கல் விழா’ நடக்கிறது. நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில்,தை பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று, நகரத்தார்கள் சார்பில் ‘செவ்வாய் பொங்கல் விழா’ நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பொங்கல் இன்று (ஜன.,19) மாலை 5.00 மணிக்கு கோயில் வாசலில் துவங்குகிறது. நாட்டரசன்கோட்டையில் வசிக்கும் நகரத்தார்களில் ஒரு குடும்பத்தை ஒரு புள்ளியாக கணக்கிட்டு வரி வசூல் செய்வர். நேற்று மாலை குடும்ப தலைவர்கள் பெயரை ‘சீட்டில்’ எழுதி, பானையில் போட்டு குலுக்கி எடுத்தனர். பொங்கல் பானை தேர்வு: இதில், முதலில் வரும் குடும்ப தலைவருக்கு, கோயில் சார்பில் மரியாதை செய்து முதல் பொங்கல் வைக்க அழைப்பர். தேர்வு செய்யப்படும் முதல் பொங்கல் பானையில், நகரத்தார் அனைவரும் பால் ஊற்றி துவக்கி வைப்பர். இந்த பொங்கல் மட்டுமே ‘மண் பானையில்’ வைக்கப்படும். அதை தொடர்ந்து நகரத்தார்கள் அனைவரும் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைப்பர். இங்கு,வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். பின்னர் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். வரன் தேடும் படலம்: நாட்டரசன்கோட்டை நகரத்தார்கள் தொழில், கல்வி, வேலை நிமித்தமாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, துபாயில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் எங்கு வசித்தாலும், ‘செவ்வாய் பொங்கல்’ அன்று கண்டிப்பாக நாட்டரசன்கோட்டைக்கு வந்து விடுவர். இதனால், திருமணம் முடிக்காத ஆண், பெண் இருபாலருக்கும் வரன் தேடும் படலமும் நடக்கும். உலகளவில் வசிக்கும் நகரத்தார் சங்கமிக்கும் விழாவாக, ஆண்டுதோறும் இங்கு ‘செவ்வாய் பொங்கல் விழா’ நடைபெறும்.