திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குவிந்த பக்தர்களின் "ஓம் நமச்சிவாயா கோஷத்திற்கு இடையே அபிராமியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்பிகை உடனுறை பத்மகிரீஸ்வர கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜன., 13ல் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5.35 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனத்துடன் ஆறாம்கால யாகசாலை பூஜை துவங்கியது. காலை 9.35 மணிக்கு மகா பூர்ணாகுதி உடன் கங்கை, யமுனை, காவேரி உட்பட பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 புனித நீர் குடங்களின் புறப்பாடு நடந்தது. கும்பாபிஷேகம்: காலை 9.48 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், 15 தங்கக் கலசம் உட்பட 22 கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள், "ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா என கோஷங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், தூத்துக்குடி செல்வம் பட்டர் தலைமையில் 129 சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலச கும்பங்களில் அபிஷேகம் செய்தனர்.
விழா துளிகள்
* காலை 9.37 மணிக்கு கருடன் கோயிலை சுற்றி பலமுறை வட்டமிட்டது.
* புனித நீர் 15 இடங்களில் இருந்து பக்தர்கள் மீது தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.
* கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண முக்கிய சந்திப்புக்களில் "மெகா திரை அமைக்கப்பட்டு இருந்தது.
* கூட்டம் அதிகமாக இருந்ததால் திண்டுக்கல் மெயின் ரோடு, நான்கு ரதவீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* செயின்ட்மேரீஸ் பள்ளியில் காலை 8.30 மணி முதல் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் 70 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* சுற்றுவட்டார பக்தர்களின் வசதிக்காக 100 இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.* சரவணன் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., சீனிவாசன், டி.எஸ்.பி., சிகாமணி தலைமையில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் வாட்சிங் டவர் அமைத்து கண்காணித்தனர்.