ஹரிஹரர் சிலையில் தலை மீண்டும் சேர்ப்பு: 130 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்!
நாம் பென்: கம்போடியாவில் இருந்து, 130 ஆண்டுகளுக்கு முன், பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஹரிஹரர் சிலையின் தலையுடன், உடல் பகுதி, மீண்டும் சேர்க்கப்பட்ட ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா, ஒரு காலத்தில், ஹிந்து மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது; அப்போது, அங்கு, ஏராளமான இந்து கோவில்கள் கட்டப்பட்டன; அவற்றில் ஏராளமான கடவுள் சிலைகளும் இருந்தன. கடந்த, 7ம் நுாற்றாண்டில், கம்போடியாவின் டாகியோ மாகாணத்தில், புனோம் பென் என்ற கோவிலில், ஹரிஹரர் என்ற சங்கர நாராயணர் சிலை இருந்தது. சிவன் – விஷ்ணு ஆகிய இரு கடவுள்களின் உருவமும் இணைந்தது தான், ஹரிஹரர். கம்போடியா நாடு, பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த சிலையின் தலைப் பகுதியை மட்டும், ஆராய்ச்சியாளர்கள் சிலர், பிரான்சுக்கு எடுத்துச் சென்றனர். பிரான்சில் உள்ள குயிமெட் என்ற அருங்காட்சியகத்தில், இந்த சிலையின் தலைப் பகுதி, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல், கம்போடியா அரசுக்கு தெரியவந்தது. சிலையின் தலையை ஒப்படைக்கும்படி, பிரான்சிடம், கம்போடியா அரசு வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை ஏற்ற, பிரான்ஸ் அரசு, சிலையின் தலைப் பகுதியை, கம்போடியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து, கம்போடியா, தேசிய அருங்காட்சியத்தில் உள்ள சிலையின் உடல் பகுதியுடன், தலைப் பகுதி பொருத்தப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில், கம்போடியா துணை பிரதமர் சோக் அன் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.