பழநி அடையாளவேல் கோயிலில் பக்தர்கள் "பொரி நேர்த்திக்கடன்!
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சத்திரப்பட்டி அடையாளவேல் கோயிலில் "பொரி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் பல கி.மீ., நடந்தே வருகின்றனர். அவர்கள் பழநிக்கு முன்னதாக சத்திரப்பட்டியை வந்தடையும் போது பழநிமலைக்கோயிலின் எழில்மிகு தோற்றத்தை அடையாளம் காட்டும் வகையில் ""அடையாள வேல் கோயில் அமைந்துள்ளது. இந்த வேலை தரிசனம் செய்தால் நீண்டதூரம் நடந்துவந்த களைப்பு நீங்கும் என்ற நம்பிக்கையில், பாதயாத்திரை பக்தர்கள், வேலையும், மலையையும் பார்த்து பரவசம் அடைகின்றனர். அடையாளவேலுக்கு "பொரி வாங்கி படைத்து அர்ச்சனை செய்து அதை பிறருக்கு பிரசாதமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ராஜ்குமார், அசோக்குமார் கூறுகையில்,""ராமச்சந்திர ஜமீன் என்பவர் தலைமையில் பாதயாத்திரையாக பழநிகோயிலுக்கு புறப்படும் போது இக்கோயில் உள்ள இடத்திலிருந்து பழநி மலையின் எழில் தோற்றம் ஜமீன்தாருக்கு தெரிந்தது. அவ்விடத்திலேயே முருகனை தரிசனம் செய்த பலனை பெற்றதாக கூறி, அவர் கொண்டுவந்த வேலை ஊன்றி பூஜை செய்து வழிப்பட்டார். அன்று முதல் இன்று வரை அவரது பரம்பரையை சேர்ந்த நாங்கள் பூஜை செய்கிறோம். பாதயாத்திரை பக்தர்களும், இதோ பக்கத்தில் வந்துவிட்டது பழநி கோயில் என அடையாளம் காட்டுவதால், அவர்களும் பரவசம் அடைந்து, களைப்பு நீங்கி செல்கின்றனர். பொரி அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற ஐதீகம் பலகாலமாக உள்ளது, என்றார்.