உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இயந்திரங்களால் இலவச மசாஜ்

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இயந்திரங்களால் இலவச மசாஜ்

பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் உடல், கால்வலியை போக்க நவீன மசாஜ் இயந்திரங்கள் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு ஆண்டுதோறும் காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர் மொத்தமாக மூலச்சத்திரத்தில் ஒன்றுசேருகின்றனர். 70 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை நடந்துவரும் பக்தர்கள் கால்வலி, முழங்கால் வலி, உடல் அசதியால் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வு அடைகின்றனர். அவ்வாறு வருவோரின் உடல்வலியை போக்கி புத்துணர்வுபெற பழநி தைப்பூசம் பாதயாத்திரை அடியார்கள் இலவச மருத்துவ சேவை அமைப்பு அமைத்துள்ளனர்.

இதன் மூலம் ஒட்டன்சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் பக்தர்களின் பாதங்களுக்கு நிவாரணம் அளிக்க நவீன மசாஜ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தலைவலி, காயம், உடல்வலிக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக தருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சிகிச்சைபெற்று செல்கின்றனர். ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். ராமநாதபுரம் பக்தர் கிருஷ்ணன் கூறுகையில்,“ கடந்த ஒருவாரமாக நடந்துவருகிறோம். ரோடுமோசமாக உள்ளதால் பாதம் வெடிப்பு, மூட்டுவலி, உடல்வலியுடன் ஒட்டன்சத்திரம் மருத்துவமுகாமில் இயந்திரத்தில் இலவச சிகிச்சை பெற்றேன். இதேபோல மற்ற இடங்களிலும் பக்தர்களுக்கு உதவலாம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !