ஆட்டின் முதுகில் அலகு குத்தி விளந்தையில் செடல் உற்சவம்
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே மாரியம்மன் கோவிலில் ஆட்டின் முதுகில் அலகு குத்தி செடல் ஏற்றும் நூதன திருவிழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை நடந்தது. மதியம் 3 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவிலில் இருந்து எழுந்தருளியது. சக்தி கரகத்தை எதிர் கொண்டு அழைத்து செடல் உற்சவம் துவங்கியது. உலக நன்மைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செடலில் செம்மறி ஆட்டின் முதுகில் அலகு குத்தி வலதுபுறம் மூன்று சுற்றும், இடது புறம் மூன்று சுற்றுமாக சுழற்றிய பின், செடலில் இருந்து ஆடு இறக்கப் பட்டது. இதனையடுத்து அம்மன் தேரில் வீதியுலா நடந்தது.