சபரிமலை நடை திறப்பு : வரும் 21ம் தேதி அடைக்கப்படும்!
சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்குப் பின், ஆக.,21 இரவு அடைக்கப்படும். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆவணி மாத பூஜைகளுக்காகவும், சிறப்பு பூஜைகளுக்காகவும், கோவில் நடை, இன்று மாலை 5.30 க்கு திறக்கப்படும். இன்று கோவிலின் புதிய தந்திரியாக (தலைமை அர்ச்சகர்), கண்டரரு மகேஸ்வரரு பதவி ஏற்பார். அவரது முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் இருக்காது. நாளை (ஆக.,17) அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். சிறப்பு பூஜைகளான உதயாஸ்தமனம், படி ஆகியவையும் நடக்கும். ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்து, ஆக., 21 இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஓணம் பண்டிகைக்காக நடை திறப்பு : கேரளாவில் முக்கிய பண்டிகையான, ஓணம் பண்டிகையை யொட்டி, கோவில் நடை செப்., 7 ல் மாலை 5.30 க்கு நடை திறக்கப்படும். மறுநாள் (செப்.,8) முதல் செப்.,11 வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நான்கு நாட்களும் ஓண விருந்து, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.