படையெடுக்கும் வேட்பாளர்கள்: ஜோதிடர்கள் காட்டில் மழை!
பெங்களூரு: பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வெற்றி குறித்து, ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு மதிப்பு அதிகரித்து உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டுள்ள வேட்பாளர்கள், தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா, வெற்றி வாய்ப்புள்ளதா என்று, ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் ஜோதிடர்களுக்கு, ‘டிமாண்ட்’ ஏற்பட்டு உள்ளது. டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களிடம், ஜோதிடர்கள் ஆலோசனையை முதலில் கேட்கும்படி கட்சி தலைவர்களே அறிவுறுத்துவதாக தெரிகிறது. ஹாசன் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு, கட்சி தலைவரை, பெண் ஒருவர் அணுகியபோது, முதலில் ஜோதிடரை சந்தித்து, ஜாதகத்தில் தங்களுக்கு சாதகமாக இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொண்ட பின், டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சிறப்பு பூஜை: ஹாசன் மாவட்டத்தை பொறுத்தவரை, டிக்கெட் பெறுவதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கட்சியினர் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ‘உள்ளூர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே, ‘பி’ பார்ம் வழங்கப்படும்’ என, ம.ஜ.த., தலைவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. சில நேரங்களில் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் வெற்றி குறித்து, உள்ளூர் ம.ஜ.த., தலைவர்களே, ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஹொலே நரசிப்பூரைச் சேர்ந்த, ஜோதிடர் ரமேஷ் பட் கூறுகையில், ‘‘பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பலரும் ஆலோசனை கேட்க வருவது உண்மை தான். நாங்கள், அவர்களின் ஜாதகத்தை வைத்து ஆலோசனை கூறுகிறோமே தவிர, வெற்றி பெறுவாரா, மாட்டாரா என்பது குறித்து தீர்மானமாக கூற முடியாது.
ஆலோசனை: ‘‘ஒரு சிலர் போன் மூலமாகவும் தகவல் கேட்கின்றனர். இருப்பினும், நேரில் வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே ஆலோசனை கூறுகிறோம்,’’ என்றார். கோடி மடாதிபதி சிவானந்தா சிவயோகி ராஜேந்திர சுவாமியிடமும் சிலர், வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனை கேட்டதாக தெரிகிறது. பஞ்சாயத்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு எதிர்காலம் இருக்கிறதோ இல்லையோ, பெரும்பாலான ஜோதிடர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகி உள்ளது.