உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் இன்று துவங்குகிறது. பொள்ளாச்சி அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில், தை, ஆடி மாத வெள்ளி மற்றும் அமாவாசை நாட்கள் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன், துவங்கி குண்டம் திருவிழா பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வில், ஆனைமலை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் விரதமிருந்து, குண்டம் இறங்குவர்.

நடப்பாண்டு குண்டம் திருவிழா, தை அமாவாசையான இன்று, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 83 அடி உயரம் உள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக ஆனைமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இன்று உப்பாற்றங்கரையிலிருந்து கம்பம் ஊர்வலமாக, கோவிலில் கம்பம் நடும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின், கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். இதனைத்தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வரும் 21ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபணம், மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.

23ம் தேதி காலை 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகா முனி பூஜையும் நடந்தது. வரும் 26ம் தேதி பகல் 11:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள்: விழாவையொட்டி, மார்ச் 8ம் தேதி மங்கள இசை நிகழ்ச்சியும், 21ம் தேதி கோவை லோகாஸ் குழுவினரின் பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சியும்; 23ம் தேதி இரவு 10:30 மணிக்கு கோவை சரண் மெலோடியஸ் குழுவினரின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !