வருகிறது ரதசப்தமி திருநாள்!
தை அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமி திதியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்.14ல் ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் தேதியில் சூரியன் தன் வட திசைப்பயணத்தை ஆரம்பிக்கிறார். பயணப்பாதையில் அவரது தேர் நிலைப்படுத்தப்படும் நாளே ரதசப்தமி. சூரிய உதயத்திற்கு முன் நீராடுவோர் கங்கை நதியில் நீராடிய புண்ணியத்தை அடைவர். ஆரோக்கியம், நீண்ட ஆயுள் உண்டாக விரும்புவோர் இந்நாளில் ஐந்து அல்லது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை தலையில் வைத்து நீராடவேண்டும். பெண்கள் இலைகளோடு சிறிது மஞ்சள் அரிசி (அட்சதை)யும் சேர்த்துக் கொள்வது அவசியம். நீராடிய பின், விளக்கேற்றி ஆதித்ய ஹ்ருதயம், சூரிய ஸ்தோத்திரம், சூரிய துதிகளைப் படிக்க வேண்டும். அமாவாசை தினத்திற்கு ஈடான நாள் என்பதால், தந்தை அல்லது கணவனை இழந்தவர்கள் பிதுர் தர்ப்பணம் செய்வர். ரத சப்தமியன்று சூரியனை வழிபட்டால் அடுத்த பிறவியில் இருந்து கணவனை இழக்கும் நிலையில் இருந்து விடுபட்டு சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறலாம். ரதசப்தமிக்கு நாளுக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி வருகிறது. இந்நாளில் பெற்றோர் உள்ளவர்களும் கூட பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்யலாம். தந்தைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த பீஷ்மருக்கு நாம் எல்லாரும் பிள்ளைகளாக இருந்து இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.