கணவன் மனைவிக்கு அரிய செய்தி!
உலகத்திலேயே சிறந்த பொக்கிஷம் எது என்றால், தங்கப்புதையல் என்றும், வைர வைடூரியங்கள் என்றும் பதில் சொல்வோம். ஆனால் நபிகள் நாயகம் தம் நண்பர் ஒருவரிடம், தோழரே! மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் மிகச்சிறந்ததை உமக்கு அறிவிக்கட்டுமா? என்றார். அந்த நண்பர் ஆவலுடன் அவரை நோக்க, நல்ல பெண் தான் மிகச்சிறந்த பொக்கிஷம். கணவர் அவளை பார்த்தால் அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்று விட்டால், அவரைப் பாதுகாத்துக் கொள்வாள், என்றார். இதன் பொருள் என்ன? மனைவி எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தால், அவளைப் பார்க்கும் கணவருக்கு என்ன நினைப்பு ஏற்படும்? இவளைப் போய் நிக்காஹ் செய்தோமே, அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தான், என்று தானே தோன்றும்! அதே நேரம் அவள் கஷ்டமான சூழலிலும் கூட இனிய முகம் காட்டினால், வெளியே செல்லும் கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்பி விடுவார். கணவர் கட்டளையிட்டால் ஏற்றுக் கொள்வாள் என்பது, பெண்ணடிமைத்தனம் ஆகாது. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் அனுசரிப்புத் தன்மை ஏற்படும். ஒருவேளை, கணவரது முடிவு துன்பத்தைத் தருமென்றால் சமயம் பார்த்து, இனிய முகத்துடன் எடுத்துச் சொன்னால் அவர் புரிந்து கொள்ளலாம். தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த அனுசரிப்பு எப்படி பெண்ணடிமைத்தனமாகும்? அவர் அவளை விட்டும் சென்று விட்டால் அவரைப் பாதுகாப்பாள் என்ற வாசகத்திலுள்ள அவரை என்ற வார்த்தை புரியாமல் இருக்கக் கூடும். அதாவது, கணவர் இல்லாத நேரத்தில் அவருக்காகவே நான் இருக்கிறேன் என தன் கற்பு நிலையைப் பாதுகாப்பாள் என பொருள் கொள்ள வேண்டும்.