திருச்சி கோவிலுக்கு கண் திருஷ்டி கணபதி
அவிநாசி: பூண்டியில், பத்தடி உயரத்தில் உருவாக்கப்பட்ட, கண் திருஷ்டி கணபதி சிலை, திருச்சி அருகே பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், 100க்கும் மேற்பட்ட சிற்பக்கலை கூடங்கள் உள்ளன. இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் உருவாக்கப்பட்ட, வித்தியாசமான கண் திருஷ்டி கணபதி சிற்பம், திருச்சிக்கு அனுப்பப்பட உள்ளது. ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது: கண் திருஷ்டி கணபதி சிற்பம், 10 அடி உயரம், 1.75 டன் எடை கொண்டது. ஊத்துக்குளி அருகே எடுக்கப்பட்ட பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிரசில் (தலை), அமுத கலசம், இதைச் சுற்றி, 51 கண்கள், நெற்றியின் மத்தியில் ஒரு கண், வலது மற்றும் இடது பக்கத்தில், தலா நான்கு கைகள், வயிற்றில் பட்டயம், தும்பிக்கையில் பாம்பு இடம் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. வலது கையில், சூலம், அங்குசம், சக்கரம், கத்தி, இடது கையில், அக்னிச்சட்டி, பாசம், சங்கு, கதாயுதம் ஆகியனவும், சிங்க வாகனத்தில், பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், விநாயகர் காட்சியளிக்கிறார். மிகவும் வித்தியாசமான இக்கணபதி சிற்பம், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள ஒரு விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. வைகாசி முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது.இவ்வாறு, குமாரவேல் கூறினார்.