காலி பணியிடங்கள் அதிகரிப்பு அறநிலையத்துறை வருவாய் குறைவு!
அறநிலையத்துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களால், கோவில்களுக்கு வருமானம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:அறநிலையத்துறை நிர்வாக வசதிக்காக, கமிஷனரின் கீழ், கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் தக்கார் மூலம் கோவில்கள் மற்றும் அவற்றின் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் இருந்தும் அவற்றை முறையாக பராமரிக்காமல் அதன் மூலம் வரும் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை, குத்தகை பாக்கியாக பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதற்கு காரணம், தேவைக்கு ஏற்ப செயல் அலுவலர்கள் இல்லாததே. ஒரு செயல் அலுவலர், 15 கோவில்களை நிர்வகிக்கும் நிலை உள்ளது. ஐந்து ஆண்டுகளாக, அரசு தரப்பில் தக்கார் நியமனம் இல்லாததால், அறநிலையத்துறை அலுவலர்களே வேறு கோவில்களுக்கு தக்கராக தொடரும் நிலை உள்ளது. இதனால், நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு, அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -