பன்னிரு திருமுறை இசை விழா துவக்கம்
தி.நகர்: தி.நகரில், 11ம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழா, சிறுவர்களின் தமிழிசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. வேத ஆத்ம தெய்வ தமிழிசை மன்றம், கிருஷ்ண கான சபா, ஆத்ம ஞான மையம் இணைந்து, 11ம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழாவை நேற்று துவக்கின. சிறப்பு விருந்தினராக, அமலாக்க பிரிவு இயக்குனர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். கிருஷ்ண கான சபாவின் செயலர் பிரபு வரவேற்றார். சாஸ்திரிகள், ஸ்தபதி, ஓதுவா மூர்த்திகள் ஆகியோருக்கு பட்டம் அளித்தும் சிறப்பிக்கப்பட்டது. அதில், ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு வேத ஆகம வித்தகர், எஸ்.முத்துகுமராசாமி சுவாமி தேசிகருக்கு திருமுறை வித்தகர், ஜி.சங்கர ஸ்தபதிக்கு சிற்ப கலைஞர், டாக்டர். எஸ்.அருணசுந்தரத்திற்கு ஆகம வித்தகர், ஆர்.பி.வி.எஸ்., மணியனுக்கு, விரிவுரை வித்தகர் பட்டங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆர்.பி.வி.எஸ்.,மணியன் எழுதிய, யார் அர்ச்சகர் ஆகலாம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. வரும் மார்ச் 6ம் தேதி வரை ஒரு வார காலம் பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.