நாகம்மன் கோவில் செடல் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கடலூர்:கடலூர் நாகம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.கடலூர், பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் மகோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாளான நேற்று செடல் திருவிழா நடந்தது.அதனையொட்டி விடியற்காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் செடல் போட்டுக் கொண்டு கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பலர் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.செடல் திருவிழாவை முன்னிட்டு லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. பண்ருட்டி மற்றும் புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வந்த பஸ்கள் சிதம்பரம் சாலை, ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டி.எஸ்.பி., வனிதா மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.