நமசிவாய என சொல்வோமே.... நன்மைகள் ஆயிரம் கொள்வோமே...!
மார்ச் 7 ல் மகாசிவாரத்திரி வருவதை ஒட்டி சிவனை வழிபடும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்கும் போது இதைப் படியுங்கள்.
உலகாளும் சிவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்குபவனே! பிறைச்சந்திரனை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடாமுடி கொண்டவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை காத்தருள்வாயாக. பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக. ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! நீலகண்டனே! கைலாயநாதனே! பிரபஞ்சத்தை இயக்குபவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக. புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக. தேவாதி தேவனே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவையும், சிறந்த பணியையும், நற்புகழையும் தந்தருள்வாயாக. திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக. கிரகதோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே!
சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெல்லாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும் அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக. இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! எங்கள் மனம் நிறையும் வண்ணம் பொருள்வளம் தந்தருள்வாயாக.மங்கள குணம் உடையவனே! பயத்தைப் போக்குபவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.