வரும் 9ம் தேதி சூரிய கிரகணம்!
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழும். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 9ல் அதிகாலை 4.50 மணிக்கு துவங்கி காலை 6.44 மணி வரை நடைபெற உள்ளது.
கிரகணம் உண்டாவது பற்றி புராணங்கள் கூறும் காரணம்..: பொதுவாக கிரகணம் இரண்டு வகைப்படும். ஒன்று சூரிய கிரகணம், மற்றொன்று சந்திர கிரகணம். பாற்கடலைக் கடையும் பொழுது அமுதம் கிடைத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த அமுதத்தை தேவர்களும், அசுரர்களும் உண்பதற்காக போட்டி போட்டனர். இதனைக் கண்ட திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அந்த அமுதத்தை படைக்க முற்பட்டார். அசுரர் குலத்தைச் சேர்ந்த ராகு, தேவர் உருவம் கொண்டு ராஜ கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் அமர்ந் தார். இதனைக் கண்டு பிடித்த சூரிய சந்திரர்கள் திருமாலிடம் தகவலைத் தெரிவித்தனர். இதனால் மிகுந்த கோபம் கொண்ட திருமால் தன்னுடைய அகப்பையால் ராகுவின் தலையில் அடித்தார். அவரின் தலையும், உடலும் தனித் தனியாக விழுந்தது. பிறகு பாம்பு உடலும், மனிதத் தலையும் கொண்டவராக ராகு மாறினார்.அமுதத்தை உண்டதனால் ராகு சாகாமல் வளர்ந்தார். ராகுவை அசுரர் என அடையாளம் காட்டியதால், சூரிய சந்திரர் மீது ராகுவிற்கு பகை தோன்றியது. இவர்கள் இருவரையும் பிடிக்க தொடங்கினார். அந்த அடிப்படையிலேயே இன்றும் கிரகணம் நடைபெறுவதாக ஐதீகம். காட்டிக் கொடுத்த சந் திரனை ராகுக்கோள் அதாவது கரும்பாம்பு பற்ற சந்திர கிரகணமும், சூரியனை கேதுக்கோள் அதாவது செம்பாம்பு பற்றி சூரிய கிரகணமும் நிகழ்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
கோயில் நடை அடைப்பு:
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 9ல் சூரியகிரகணத்தையொட்டி கிரகண கால அபிஷேகம் நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: சூரிய கிரகணம் மார்ச் 9ல் அதிகாலை 4.50 மணிக்கு துவங்கி காலை 6.44 மணிக்கு முடிகிறது. மார்ச் 8 ல் இரவு திருவனந்தல், வினா பூஜை நடந்து பங்குனி கதவுகள் சாத்தப்படும். இந்த நேரத்தில் அர்ச்சனை, சிறப்பு அனுமதி கிடையாது. மார்ச் 9ல் சூரியகிரகணத்தின் மத்திய காலமான அதிகாலை 5.48 மணிக்கு மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தம் எடுக்கப்பட்டு அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடக்கும். காலை 6.44 மணிக்கு கிரகணம் முடிந்தவுடன் கால சாந்தி பூஜைகள் முடிந்து வழக்கம் போல் தரிசனம் நடக்கும், என்றார்.
திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை, ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. மார்ச், 9 காலை, 5:34 மணி முதல், 9:08 மணி வரை, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன், கோவில் நடை சாத்தப்படும் என்பதால், மார்ச், 8 இரவு, 8:30 மணிக்கு, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட உள்ளது. சூரிய கிரகணம் முடிவுற்ற பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்து, புண்ணியாவசனம் நடத்திய பின், கோவில் நடை திறக்கப்படும்.
மற்றும் அனைத்து முக்கிய கோயில்களிலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, கிரகண காலத்தில் நடை அடைக்கப்படுகிறது.