உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை சூரிய கிரகணம்: சிறப்பு ஏற்பாடு

நாளை சூரிய கிரகணம்: சிறப்பு ஏற்பாடு

சென்னை: நாளை காலை தோன்ற உள்ள முழு சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து, தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான நேர்கோட்டை, சந்திரன் கடக்கும் போது, அது பூமியில் இருந்து சூரியனை மறைக்கும்; இது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்கோட்டை பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணம்.நாளை, வானில் முழுமையான சூரிய கிரகணம் தென்பட உள்ளது. இதில், சந்திரன் சூரியனை மறைப்பதால், சூரியனின் ஒளி வட்டம் மட்டும், நெருப்பு வளையமாக தெரியும். சூரியனை விட சந்திரன், 400 மடங்கு சிறியது என்றாலும், பூமியில் இருந்து சந்திரனை விட, 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்க முடிகிறது. இந்த நிகழ்வு தான், சூரிய கிரகணமாக மார்ச், 9ல் தெரிய உள்ளது.

சர்வதேச அளவில், இந்திய நேரப்படி அதிகாலை, 4:49 மணிக்கு கிரகணம் துவங்கி, 10:05 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணத்தை, பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் மத்திய இந்தோனேசியாவில் முழுமையாக பார்க்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில், பகுதி அளவில் கிரகணம் தெரியும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

சிறப்பு வசதி: கிரகணத்தை பார்ப்பதற் காக, சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சென்னையில் எப்போது? சென்னையில், சூரிய உதயம், 6:20 மணிக்கு என்ற நிலையில், அதற்கு முன் கிரகணம் துவங்கி, 6:48 மணிக்கு முடியும். சூரியன் உதித்து, 6 டிகிரி அளவில் உயரத்துக்கு வரும்போது, சென்னையில் கிரகணம் முடியும். டில்லி, மும்பையில் கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த கிரகணத்தின் போது, சூரியனை வெறும் கண்களால், அதாவது கண்ணுக்கு எந்த வித பாதுகாப்பு லென்சும் இல்லாமல் நேரடியாக பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால், கண் பார்வையில் குறைவோ, முழுமையான பார்வை பறிபோகவோ வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !