அங்காளம்மன் கோவிலில் மயான பூஜை, அலகு தரிசனம்
திருப்பூர் : மகா சிவராத்திரியை முன்னிட்டு, முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், மயான பூஜை, கும்பத்தின் மீது கத்தி நிற்கும் அலகு தரிசனம் நடைபெற்றது. திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், மகா சிவராத்திரி விழா, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், நந்தீஸ்வரர் அழைத்தல், சிவன் - அம்மன் திருமண நிச்சயதார்த்த நிகழ்வாக, வெற்றிலை பாக்கு பிடித்தல் நடைபெற்றது. தேவேந்திர பூஜையை தொடர்ந்து, தங்க கவச அலங்காரத்தில், அங்காளம்மன் எழுந்தருளினார். இரவு, 1:00 மணிக்கு, காளி, சூளி, திமிறி என, அம்மன் முகங்கள் எடுத்து ஆடுதல், மயான பூஜை நடைபெற்றது. கோவில் அருகே உள்ள மயானத்தில், எலும்பு, மண்டை ஓடுகளால், மயான ருத்ரி ரூபத்தில், எலுமிச்சை மாலை அணிந்து, அம்மன் எழுந்தருளினார். அங்கு, வல்லான கண்டனை சம்ஹாரம் செய்தார். கோவில் அருளாளிகள் கத்தி, மண்டை ஓடு, எலும்புகளை ஏந்தி வந்து ஆக்ரோஷமாக ஆடினர். வல்லான கண்டனின் குதிரை, யானை, காலாட்படைகளை அழிக்கும் வகையில், கோழி, ஆடு, பன்றி பலியிடப்பட்டன. அவற்றின் ரத்தம் கலந்த உணவை அருளாளிகள் ஆவேசத்துடன் உண்டு, சக்தியாடினர். இது, அதிகாலை, 4:00 வரை நீடித்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, அலகு தரிசன காட்சி நடந்தது. செம்பு குடத்தில், தேங்காய் முக்கண் கீழ்நோக்கியும், தலை பகுதி மேல்நோக்கியும் வைத்து, அதில் எலுமிச்சை பழம் போட்டு, அம்மன் சக்தி கும்பத்தில் எழுந்தருளிய, "சக்தி விந்தை; அங்காளம்மன் மீது லிங்கம் எழுந்தருளும் நிகழ்வாக, கத்தியின் கூர்மையான பகுதி கும்பத்தின் மீது நேராக நிற்கும் "அலகு தரிசனம் காட்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், இரவு முழுவதும் கண் விழித்து வழிபட்டனர்.இன்று காலை, 6:00, முதல்,7:30 வரை சூரிய கிரகணம்; காலை, 8:00 மணிக்கு, அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்; இரவு, 8:00 மணிக்கு, பாகை விளையாட்டு, அம்மன் வரலாறு கதை பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மாலை, 5:00க்கு, ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளல், பூவோடு எடுத்தல் நடக்கிறது.வரும், 11ல், மாவிளக்கு, பரிவேட்டை, அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, விநாயகர் கோவிலுக்கு சென்று விளையாடி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 12ல், வேடகிரி சிம்ம வாகனத்தில் பவனி வருதல், மஞ்சள் நீர் மற்றும் அம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருதல்; 13ம் தேதி இரவு, 7:00க்கு, மகா கும்ப பூஜை நடைபெறுகிறது.