மயிலத்தில் 22ம் தேதி பங்குனி உத்திர தேர் திருவிழா
மயிலம்: மயிலம் சுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழா, வரும் 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம், காலை 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள், கொடியேற்றி பங்குனி உத்திரப் பெரு விழாவை துவக்கி வைக்கிறார்.காலை 11:30 மணிக்கு, வெள்ளி விமானத்தில் உற்சவர் மலைக்காட்சி நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு, கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு விநாயகர் விழா, சூரிய விமான உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி காலை 11:00 மணிக்கு, வெள்ளி விமான உற்சவம், இரவு, ஆட்டுகிடா வாகன உற்சவமும், 16ம் தேதி காலை, பிரணவ உபதேசம், வெள்ளி விமானத்தில் உற்சவர் கிரிவலம், இரவு 8:00 மணிக்கு, வெள்ளி பூதவாகன உற்சவமும் நடக்கிறது.இதையடுத்து, 17ம் தேதி இரவு, வெள்ளி நாக வாகன உற்சவமும், 18ம் தேதி காலை 11:00 மணிக்கு, வெள்ளி விமானத்தில் உற்சவர் புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு, தங்க மயில் வாகன உற்சவமும், வரும் 19ம் தேதியன்று, வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கிரிவலம், 20ம் தேதி காலை, வெள்ளி விமானத்திலும், ஊடல் விழாவும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் புறப்பாடும் நடக்கிறது.
தொடர்ந்து 21ம் தேதி காலை, விமான உற்சவம், இரவு 8:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து வெள்ளி குதிரை வாகன உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 22ம் தேதி காலை 6:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 9:00 மணிக்கு, முத்து விமான உற்சவம், 23ம் தேதி காலை, மயிலம் அக்னி குளத்தில் பங்குனி உத்திர மகா தீர்த்தவாரியும், இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. மேலும், 24ம் தேதி இரவு, முத்துப் பல்லக்கு உற்சவமும், 25ம் தேதி, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்துள்ளார்.