ஏகாம்பரநாதர் உற்சவர் சிலையை மாற்ற வேண்டாம்: தொல்லியல் அறிஞர் கருத்து!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையை பழுதுபார்த்து, தொடர்ந்து பூஜை வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம் என, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறினார். ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது; அம்மன் சிலை கை விரல் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த சிலையை மாற்ற வேண்டும் என, கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறை முடிவு செய்து, வேறு சிலை செய்யும் பணி நடந்து வருகிறது.தற்போது நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் வீதி உலாவுக்கு, பழைய உற்சவர் சிலையையே பயன்படுத்தி வருகின்றனர். திங்கள் கிழமை நடந்த சந்திரபிரபை உற்சவத்தின் போது, சுவாமியுடன் இணைந்திருக்கும் அம்மன் சிலையில் ஆட்டம் ஏற்பட்டதால், அது விழுந்து விடாமல் இருக்க, கோவில் குருக்கள் பிடித்த படி, வீதி உலா நடைபெற்றது.இந்நிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் ரா. நாகசாமி, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேற்று சென்று, கோவில் செயல் அலுவலர் மற்றும் குருக்களிடம் விவரம் கேட்டறிந்தார். பின், காமாட்சி அம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில்களுக்கு சென்று பார்வையிட்டார்.
பின் அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:ஆகம விதிப்படி, வழிபடப்படும் ஒரு சிலையின் தலை அல்லது உடம்பு சேதம் அடைந்தால் மட்டுமே அந்த சிலையை மாற்றி, வேறு சிலையை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். ஏகாம்பரநாதர் உற்சவர் சிலையின் பீடத்தில் அம்மன் சிலை அடிபாகம் மட்டும் தான் சேதம் அடைந்துள்ளது. கைவிரலும் சேதம் அடைந்துள்ளது; அதை சரி செய்து விடலாம். விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில், ஜெடிபந்தனம் என, கூறப்படும், உலோகத்தை வைத்து பற்ற வைத்து, சிலையை தொடர்ந்து பூஜைக்கு பயன்படுத்தலாம். சிலையை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.