உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சருகுவலையபட்டி மீன்பிடித் திருவிழா!

சருகுவலையபட்டி மீன்பிடித் திருவிழா!

மேலுார்: மேலுார் அருகே சருகுவலையபட்டி கம்பளியான் கண்மாயில் 18 கிராமத்தினர் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்று மீன்களை பிடித்தனர். சருகுவலையபட்டி ஊதக்கருப்ப அய்யனார் கோயில் கம்பளியான் கண்மாயில் பங்குனி தோறும் மீன்பிடித் திருவிழா நடக்கும். நேற்று மீன்பிடித் திருவிழா குறித்து தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. கிராம பெரியவர்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பிறகு ஊர்வலமாக கண்மாய்க்கு சென்றனர்.  அங்கு கிராமத்தின் சார்பில் துண்டு வீசியவுடன் சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, தனியாமங்கலம் உட்பட 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் வலைகளுடன்  கண்மாயினுள் இறங்கி மீன்களை பிடித்தனர். விரால், கெண்டை, கெழுத்தி, சிலேபி, கட்லா போன்ற மீன்கள் பிடிபட்டன. கிராமத்தினர் கூறியதாவது:- விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி வாழவும் ஊதக்கருப்ப சாமிக்கு  நேர்ந்து கோயில் கண்மாயில் மீன்களை வாங்கி விடுவது வழக்கம்.   ஜாதி, மத பேதமின்றி வாழ  முன்னோர்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !