திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாண வைபவம்
சேலம்:திருமலை-திருப்பதி தேவஸ்தான தாஸ சாகித்ய ப்ராஜக்ட் மற்றும் சேலம் ஸ்ரீ ராகவேந்திரா டிவைன் சொஸைட்டி சார்பில், ஸ்ரீ ஹரிதாஸவைபவ நிகழ்ச்சி, சேலம் ஃபேர்லண்ட்ஸ் தெய்வீகம் திருமண மண்டபத்தில், இன்று (25ம் தேதி) முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.விழாவையொட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேச பெருமாள் விக்ரகம் கொண்டு வரப்பட்டு கல்யாண வைபவ நிகழ்ச்சியில் வைக்கப்படுகிறது. திருமண மண்டப வாசலில், திருப்பதியில் இருப்பதைப் போன்று ஸ்ரீஸ்ரீ வராகஸ்வாமி உருவம் அமைக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜனை மண்டலி குழுவினர் பங்கேற்கின்றனர்.ஹோமம், அலங்கார அர்ச்சனை, சொற்பொழிவு, உபன்யாசம், இசை கச்சேரிகள், பொம்மலாட்ட நிகழ்ச்சி, ஆன்மிக ஊர்வலம் உள்ளிட்டவை நடக்க உள்ளது. 28ம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ ஆனந்த தீர்த்தாச்சாரியார் தலைமையில் ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் மருத்திகா பிருந்தாவன நிர்வாகிகள் செய்கின்றனர்.