உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர உற்சவம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பங்குனி உத்திர உற்சவம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சிதம்பரம்: பங்குனி உத்திரம் உற்சவத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகர் கோவில்களில் பக்தர்கள் செடல் அணிந்தும்,  காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள பாண்டிய நாயகம் கோவில் வள்ளி  தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்தரம் உற்சவத்தையொட்டி சுவாமி சிவகங்கை குளத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் சிவகங்கை குளத்தில் பங்குனி  உத்திர தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  கஸ்பா நகர் முருகன் கோவிலிலில்  சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு, செடல் மற்றும் காவடி எடுத்து பிராத்தனை  செய்தனர்.  சிதம்பரம் பாம்பன் சுவாமி கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்  மற்றும் தீபாராதனை மற்றும் திருக்கல்யாணம் நடந்தது.  

பெண்ணாடம்: சிவசுப்ரமணிய சுவாமி மடாலயத் திருக்கோவிலில் நேற்று காலை வெள்ளாற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள்  பால் குடம் சுமந்து, காவடி எடுத்தும்; செடல் அணிந்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கம்மாபுரம்: சுப்ரமணியர் கோவிலில், காலை அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து மணிமுக்தாற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் செடல்  அணிந்து, காவடி எடுத்து, பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன்  செலுத்தினர்.தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி பூஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.   அதேபோல், விளக்கப்பாடி செல்லியம்மன் கோவில், விருத்தகிரிக்குப்பம் சுப்ரமணியர் கோவில், ஊத்தாங்கால் முனீஸ்வரன்  கோவில்களில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமானோர் வழிபட்டனர்.

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை  முன்னிட்டு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. காவடிகளுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.   பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்தனர். நெல்லிக்குப்பம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி மற்றும் கைலாசநாதர் கோவில் தெருவில் உள்ள  பாலமுருகன் கோவில்களிலும் காவடி பூஜை நடந்தது.

புதுச்சத்திரம்: சந்திரநாயகபுரம் பாலமுருகன் கோவிலில் நேற்று காலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதேபோல்  நைனார்குப்பம் பாலசுப்ரமணியர் கோவிலில் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு பக்தர்கள்  காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !