வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த புனித வெள்ளி இறைவழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று அதிகாலை 5 மணிமுதல் மாலை 5 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனைகள் பல்வேறு தரப்பினரால் நடத்தப்பட்டது.
அடைக்கல அன்னை அருட் சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள்,நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர். தொடர்ந்து தேவாலய கலையரங்கில், மாலை 6.30 மணிக்கு பேராலய அதிபர் பிரபாகர் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் தலைமையில் இறை வழிபாடு, பொது மன்றாட்டு,சிலுவை ஆராதனை நடந்தது.சிறப்பு திருப்பலியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புனித வெள்ளியை தொடர்ந்து இன்று புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப் படுகிறது. இதனால் பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறாது.
இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது. அன்று காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்,மலையாளம், கொங்கணி, தெலுங்கு,இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். மாலை 6.45 மணிக்கு உயிர்த்த இயேசு கிறிஸ்து தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து திவ்ய நற்கருணை பாதிரியார்களால் வழங்கப்படுகிறது.