உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதியோர் திருப்பதி செல்ல ஏற்பாடு!

முதியோர் திருப்பதி செல்ல ஏற்பாடு!

திருப்பூர்: ஸ்ரீவாரி டிரஸ்ட் மூலம், 160 முதியவர்கள், இலவசமாக திருப்பதி அழைத்துச் செல்லப்படுகின்றனர்; விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என,  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 60 வயதுக்கு மேற்பட்ட, வசதியில்லாத முதியோர், 160 பேர், திருப்பதிக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து வர, பெருமாள் பக்தர்கள் குழு மற்றும்  திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி செல்வதற்கு ரயில் வசதி, ஆறு வேளை உணவு, இரண்டு சுதர்சன டிக்கெட், நான்கு பிரசாத லட்டு உள்ளிட்ட, அனைத்து செலவுகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. திருச்சானுõர் பத்மாவதி தாயார் தரிசனம், தங்கும் விடுதி வசதி, தனித்தனி அடையாள அட்டை, 10 பேருக்கு ஒரு மேற்பார்வை உதவியாளர், மருத்துவ குழு மற்றும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வசதியில்லாத முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இப்பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பதி செல்ல விரும்புவோர், திருப்பூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்பதிவு அலுவலகத்தில், கலர் போட்டோ மற்றும் அடையாள அட்டை நகல் கொடுத்து, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 - 2424 401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், துணை தலைவர் செல்வம், செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !