கரூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி விழா
கரூர்: முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கரூர் தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கடந்த மார்ச், 27ம் தேதி அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் பாலித்து வந்து கோவிலில் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 28ம் தேதி சிம்ம வாகன மண்டகப்படியும், 29ம் தேதி அன்ன வாகன மண்டகப்படியும், 30ம் தேதி சர்ப்ப வாகன மண்டகப்படியும், 31ம் தேதி யானை வாகன மண்டகப்படியும், 1ம் தேதி இரவு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு அமராவதி ஆற்றங் கரையிலிருந்து, பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து காலை, 10 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். வரும், 10ம் தேதி ஊஞ்சல் மண்டகப்படியுடன் விழா முடிவடைகிறது.