ராசிபுரம் அம்மன் கோவிலில் அதிசயம்: தண்ணீரில் விளக்கு ஏற்றி வழிபாடு
ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவில் விழாவில், தண்ணீரில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம் சந்திரசேகரபுரம் ஊராட்சியை அடுத்த தட்டான்குட்டையில், பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனியில் நடந்து வருகிறது. கடந்த, ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மனுக்கு தண்ணீரில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூசாரிகள், வெங்கட், நடேசன் இருவரும் கோவில் கிணற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்தனர். பின்னர் கோவிலில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய்யை கீழே ஊற்றவிட்டு, தண்ணீரால் நிரப்பி எரியவிட்டனர். பின்னர், மலர் அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு சாட்டையடி நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இந்த அதிசய நிகழ்ச்சியை பார்க்க, சுற்று வட்டார கிராம மக்கள் அதிகளவு வந்திருந்தனர். இக்கோவிலில், திருவிழா தினத்தில், ஒருமுறை மட்டுமே தண்ணீரில் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் சாதாரணமான எண்ணெய்யில் தான் விளக்கு ஏற்றுகின்றனர்.