உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) குருவின் ஆதிக்கம் ஓங்கும் ஏழரை ஆதிக்கம் குறையும்!(60/100)

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) குருவின் ஆதிக்கம் ஓங்கும் ஏழரை ஆதிக்கம் குறையும்!(60/100)

பணத்தை விட மன நிம்மதியே பெரிதெனக் கருதும் விருச்சிக ராசி அன்பர்களே!

துர்முகி ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், ஆக. 2ல் கன்னி ராசிக்கு மாறியதும் நிலைமை முன்னேறி விடும். அப்போது அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். செய்யும் வேலை சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகளும் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த செயல்களில் வெற்றி காணலாம். உங்களுக்கு இருந்த அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். சனி பகவான் தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது ஏழரை சனி காலமாகும். அவரால் உடல் உபாதைகள் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம்.

வெளியூர் வாசம் இருக்கும். அதேநேரம் அவரது 3-ம் இடத்துப் பார்வை, செயல்பாடுகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தரும். ராகு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது 4-ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இந்த சமயத்தில் சேர்க்கை சகவாசத்தில் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் குருவின் நல்ல இடமும் பார்வையும் இந்த கிரகங்கள் தரும் தொல்லையை பெருமளவு குறைத்து விடும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். ஆக. 2க்கு பிறகு குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் சிரத்தை எடுத்து புதிய வீடு கட்டலாம். புதிய வாகனம் வாங்கலாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஆக.2  வரை அலைச்சலும், பளுவும் இருக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். புதிய தொழிலை தவிர்க்கவும். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். போட்டியாளர்களை சமாளிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டி வரும். ஆக. 2க்கு பிறகு மனக்கவலை, பொருள் இழப்பு முதலியன மறையும். முந்தைய நிலை மாறி லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களின் வேகம் குறையும். லாபத்தை பிறதொழில்களில் முதலீடு செய்வது குறித்து யோசிப்பீர்கள். எனினும் ஏழரைச்சனியின் தாக்கம் இருப்பதால் ஒன்றுக்கு பலமுறை யோசித்து எதிலும் இறங்குங்கள்.

பணியாளர்கள் ஆக. 2 வரை அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியது இருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழையுங்கள். இதுவே உங்கள் வேலையைக் காக்கும் ஆயுதமாக இருக்கும்.  ஆக.2க்கு பிறகு வேலையில் இருந்த பிற்போக்கான நிலை  மறையும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த கடன் கிடைக்கும். வீடு கட்டுவது, மகன், மகள் திருமணத்துக்காக கேட்டிருந்த கடன்தொகை கைக்கு கிடைக்கும். தனி நபர்களிடம் கடன் வாங்காமல் வங்கிகளை நாடி வாங்குவதே விரயத்தைக் குறைக்கும்.

கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். அவர்களது வருமானம் உயரும் வகையில் வாய்ப்புகள் குவியும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் ஆக. 2க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். அதுவரை அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது.

விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு அமைய வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஆக.2க்கு பிறகு நகை, பணம் சேரும். உடல் நலத்தில் பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

2017 ஜன.16-ஏப்.13 ஜனவரியில் குரு 12-ம் இடத்துக்கு அதிசாரமாக வருகிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மை தர இயலாது. முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டமாக உள்ளதால் எடுத்த செயலை முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண வேண்டி வரும். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும் உயரும். மதிப்பு, மரியாதை சீராக
இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பொருட்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறு வரலாம். புதிய  முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள், பொது நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள் கடும் முயற்சி எடுத்து படித்தால் தான் சிறந்த மதிப்பெண் பெற முடியும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை  இருக்காது. குறிப்பாக நெல், சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. இந்த சமயத்தில் வீட்டுச் செலவுக்கு சற்று தட்டுப்பாடு வரலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் வரவு செலவை சமாளித்து விடலாம்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீலநிற வஸ்திரத்தையும், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள். முருகன் வழிபாடு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !