உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சங்கடமே இல்லாம சாதித்துக் காட்டுவீங்க! (60/100)

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சங்கடமே இல்லாம சாதித்துக் காட்டுவீங்க! (60/100)

வெள்ளை உள்ளம் கொண்ட மீன ராசி அன்பர்களே! (60/100)

ராகு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்பதால் அவரால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பொன் பொருள் சேரும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். தகாதவர்களின் சேர்க்கையில் இருந்து விடுபடுவீர்கள். சாதுர்யமாகச் செயல்பட்டு சங்கடமே இல்லாமல் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். கேது 12-ம் இடத்தில் இருப்பது  சிறப்பான இடம் அல்ல. இவரால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை உருவாகலாம். குருபகவான் வக்கிரம் அடைந்து 6-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இதனால் மனதில் காரணமற்ற பயம், தளர்ச்சி ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். 2016 ஆக.2 வரை குரு சிம்ம ராசியிலேயே இருப்பார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். இதன் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கையில் எப்போதும் பணம் புழங்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.

ஆடம்பர வசதி பெருகும். பணியாளர்கள் பணி உயர்வு, செல்வாக்கு பெற்று மகிழ்வர். சனிபகவான் 9 ம் இடத்தில் இருக்கிறார். அவரால் எதிரி மூலம் தொல்லை ஏற்படும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். ஆனால் அவரது 3,7,10ம் பார்வை பலத்தால் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. குடும்ப வாழ்வில் நன்மை மேலோங்கும். புதிதாக வீடு மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். புதிய முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் பன்மடங்கு அதிகரிக்கும். தொழில், பணி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல நேரிட்டாலும் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆக. 2 க்கு பிறகு குரு பகவான் சாதகமான இடத்துக்கு வருகிறார். அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்- மனைவி இடையே அன்னியோனியம் அதிகரிக்கும்.  வசதியான வீட்டிற்கு குடிபோகும் சூழ்நிலை  உருவாகும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். சலுகைகளைப் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். ஆக. 2 க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவும், திறமைக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும். விரும்பிய பணி, இட மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆக. 2 க்கு பிறகு வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் முயற்சியிலும் ஈடுபடலாம். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் அரசு வகையில் பாராட்டு விருது கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த புதிய பதவியைப் பெற்று மகிழ்வர்.

மாணவர்கள் ஆக. 2க்கு பிறகு கல்வி வளர்ச்சி காண்பர். பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் படிப்பர்.

விவசாயிகள் நிலப்பிரச்னையில் இருந்து விடுபடுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் கணவரின் அன்பும் அரவணைப்பும் பெறுவர். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமிதம் கொள்வர். கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற சிரமம் ஏற்படலாம். உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.

2017 ஜனவரி- ஏப்ரல் 13 ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடையும் குரு மார்ச் 10 வரை அங்கேயே இருக்கிறார். இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்று இருந்தாலும் அவரது  5, 7, 9 ம் இடத்துப் பார்வை சாதகமாக அமையும். கேதுவாலும் நன்மை தொடர்ந்து கிடைக்கும்.  பொருளாதார நிலை ஓரளவு கைகொடுக்கும். ஆடம்பர எண்ணத்தைக் கைவிட்டு சிக்கனமாக இருப்பது நல்லது. முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபடக் கூடாது. சமூக மதிப்பு சுமாராகவே இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிருக்காது. தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் சாதகமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் விடாமுயற்சியின் பேரில் நடந்தேறும்.

பணியாளர்கள் முன்பு போல சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்தால் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். வேலைப் பளுவைச் சந்திக்க நேரிடும். பணி விஷயமாக ஏற்படும் அலைச்சலை தவிர்க்க முடியாது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு
கிடைக்கும்.
 
வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக முயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிரிகளால் பிரச்னை உருவாகி மறையும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு மற்றவர்களால் தட்டிப் பறிக்கப்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் தானியங்களைப் பயிர் செய்ய வேண்டாம். புதிதாக வம்பு வழக்கில் சிக்குவது நல்லதல்ல.

பெண்கள் கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல் நலம் சீராக இருக்கும். அவ்வப்போது மனத்தளர்ச்சி உண்டாகலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்கள். துர்க்கை அம்மனை வழிபடுங்கள். சாஸ்தா வழிபாடு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏழை பெண்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். 2016 ஆக. 2 வரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !