திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை விழா துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திண்டுக்கல் சன்னதி தெருவில் ஸ்ரீஞானாம்பிகை உடனமர் ஸ்ரீகாளகத்தீஸ்வரர், அபிராமியம்மன், பத்மகிரிஸ்வரர் கோயில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டது. இங்கு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர்கள் வேலுச்சாமி, கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சிவாச்சாரியார்கள் குருநாதர், முத்துக்குமரர் கூறியதாவது: கோடான கோடி தேவர்கள் கொடிமரத்தில் உள்ளதாக ஐதீகம். அந்த சக்திகளை ஒண்றிணைப்பதற்காக ஹோமப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின், உற்சவ மூர்த்திகளான பத்மகிரீஸ்வரர் பிரியாவிடை, அபிராமியம்மன் சுவாமி முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. ஏப்., 21 வரை சிறப்பு பூஜை, அபிஷேகம், வீதியுலாக்கள், விசேஷங்கள் நடக்க உள்ளன, என்றார்.
அம்பாள் தீர்த்தக் கிணறு: கோயில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கொடி மரத்தின் அருகே அபிராமியம்மன் தீர்த்தக்கிணறு உள்ளது. இதில் ஊரும் தீர்த்த நீரை வைத்துத்தான் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோயிலின் பணிகள் செய்யப்பட்டது. கிணற்றுக்கு அருகே 3 அடி இடைவெளி விட்டு அடுத்த இடத்தில் போர்வெல் அமைத்தோம். ஆனால் நீர் வரவில்லை. இந்த இடத்தில் மட்டும் நீர் அதிகமாக கிடைத்தது. தீர்த்தக்கிணறில் கிடைக்கும் நீரில்தான் தற்போது பக்தர்களுக்கு குடிநீர் சப்ளை செய்கிறோம். இதன் புனிதம் காரணமாக பாதுகாப்பு அளித்துள்ளோம், என்றார்.