மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பீடத்தில் தமிழ் புத்தாண்டு
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 15 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார் நேற்று வழங்கினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், துர்முகி தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நேற்று, தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பங்காரு அடிகளார், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். விழா ஏற்பாடுகளை, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க வார வழிபாட்டு மன்றங்களைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.