பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி வழிபாடு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கோவிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழைமையான சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்கரன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில், சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள், கருவறையில் உள்ள நேத்ரோ தாரணீஸ்வரர் மற்றும் சத்தியாம்பிகை மீது சூரியக் கதிர்கள் படரும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று சித்திரை முதல் நாளையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் உள்ள வினாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், மூலவர் நேத்ரோ தாரணீஸ்வரர், சத்தியாம்பிகை, பனங்காட்டீஸ்வரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 6:04 மணிக்கு சூரியோதம் துவங்கியது. அடுத்த 25 நிமிடத்தில் நேத்ரோ தாரணீஸ்வர் மீதும், அடுத்த 15 நிமிட இடைவெளியில் சத்தியாம்பிகை மீதும் சூரியக் கதிர்கள் படர்ந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜா, தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.