உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புடன் கொண்டாட்டம்!

திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புடன் கொண்டாட்டம்!

திருச்சூர்: கேரளாவில் பூரம் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதே சமயம், முன்னெச்சரிக்கையாக உரிய பாதுகாப்புடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், பெரியளவில் வாண வேடிக்கைகள் நடைபெறுவதுடன், யானைகள் அணிவகுப்பும் நடைபெறும். இந்நிலையில், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோவிலில் வெடி விபத்து நடந்து, 113 பேர் உயிரிழந்ததால், இந்த ஆண்டு பூரம் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், கேரளாவின் பாரம்பரிய விழாவை சீர்குலைக்கக் கூடாது எனக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதுடன் குறைந்த சத்தம் கொண்ட வெடிகளை வெடிக்க, கேரள ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

இதையடுத்து பூரம் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. வடக்குநாதர் கோவில் மைதானத்தில் காலையில் தொடங்கிய நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். யானைகளின் கண்கவர் அணி வகுப்பு நடந்தது. இசை வாத்தியங்களின் இன்னிசையும் நடந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் பூரம் விழாவை கண்டு களித்தனர். உரிய கண்காணிப்புடன் இரவில் நடைபெறும் வாண வேடிக்கையுடன், இன்று காலை, விழா நிறைவு பெறுகிறது. பூரத்தையொட்டி, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா உற்சாகமாக கொண்டாடப்பட்ட அதே வேளையில் உரிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !