ரம்ஜான்: நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!
அண்ணல்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். ""ரம்ஜான் வந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் சூரியன் உதிப்பதற்கு முன்னர் உணவு உட்கொண்டு பகல்முழுவதும் பசித்திருந்து, தாகித்திருந்து, தொழுகை வணக்கங்கள் மேற்கொண்டு திருக்குர்ஆனை ஓதிக்கொண்டும், நாவினைக் கட்டுப்படுத்தி வீண்பேச்சு, கேலி, கிண்டல், புறம் பேசுவதைத் தவிர்த்து தீய மற்றும் பாவமான செயல்களை விட்டு விலகியிருந்து, மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பு திறந்து, இரவு தராவீஹ் எனும் தொழுகையில் குர்ஆனின் வசனங்கள் ஓதுவதைக் கேட்டும், தொழுதும், இறைவனின் சிந்தனையில் இருந்து இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். இவ்வாறு நோன்பு தொழுகை, குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல் ஆகிய வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடுவதாலும், தீமைகளை விட்டு சுயகட்டுப்பாட்டுடன் விலகி வாழ்வதாலும், அவர்களை வழிகெடுக்க ஷைத்தான்களால் இயலுவதில்லை. இதுவே ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதன் பொருளாகும். நன்மைகளால் சுவனத்திற்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும். தீமைகளைக் கைவிடுவதால் நரகத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதுவே சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்ட நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதின் கருத்து என அறிஞர் பெருமக்கள் விளக்கம் அளிக்கின்றனர். நோன்பு எல்லாப் பாவங்களில் இருந்தும் தப்பிக்க உதவும் கேடயமாகும். மனிதனைப் படைத்து அவனுக்கு வழிகாட்ட வேதத்தை வழங்கி மேலும் அவனுக்கு எண்ணற்ற அருட்பேறுகளை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியதும், அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதும் அனைவரின் கடமையாகும். வீட்டிலே எல்லா வகையான உணவிருந்தும், சுயகட்டுப்பாட்டுடன் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நம்பிக்கையாலும், இறையுவப்பைப் பெறவேண்டும் என்பதாலும், பசியோடும் தாகத்தோடும் இருக்கிறோம். இந்த நோன்பு நம்மிடையே இறையச்சத்தை வளர்க்கிறது. இறைவன் திருமறையில் கூறுகின்றான். நோன்பின் மூலம் நீங்கள் இறையச்சம் மிக்கவர்களாகத் திகழக்கூடும். இறையச்சம் செழித்த வளர்கின்ற வசந்தகாலம் தான் ரம்ஜான் மாதம். இறைவன் முழு மனித சமுதாயத்திற்கும் அருளிய அருள் வளங்களிலே தலையாயது திருக்குர்ஆன் தான். இறைவன் தன் திருமறையிலே, ""மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கின்றது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கிறது, என்று கூறியுள்ளான்.(திருக்குர்ஆன்10:57)