ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் திருவிழாவில் சுவாமி அம்மன் மீனாட்சி, காமாட்சி, சிவபூஜை, முருகனுக்கு சக்திவேல் வழங்குதல், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டல், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி உள்ளிட்ட அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஆகம முறைப்படி நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் மீனாட்சி, சொக்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.