கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்!
கோவை: மகாவீர் ஜெயந்தியையொட்டி, கோவையில் நேற்று ஜெயின் சமயத்தவர்கள் பங்கேற்ற ஆன்மிக ஊர்வலம் நடந்தது. கோவை ரங்கே கவுடர் வீதியில் சுபாஷ்நாத் ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இங்கு வர்த்தமான மகாவீரர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மகாவீரர் பிறந்நாளில், அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரமாண்ட ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதன்படி சுபாஷ்நாத் கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட மகாவீரர், ரதத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார். ஜெயின் சமய பெரியவர்களில் ஒருவரான, திவேஷ் சந்திரசாகர் தலைமையில், ஏராளமான சன்னியாசிகள் ஒன்று திரண்டு, மகாவீரர் பிறந்தநாள் யாத்திரையை துவக்கி வைத்தனர். ஊர்வலம் ரங்கேகவுடர் வீதியிலிருந்து, புறப்பட்டு, இடையர்வீதி, ராஜவீதி சந்திப்பை கடந்து, வைசியாள் வீதியை அடைந்தது. அங்குள்ள உபாஷ்நாத் ஜெயின் கோவிலில், சிறப்பு பூஜைகளை நிறைவு செய்து, அங்கிருந்து ஒப்பணக்கார வீதி, வெரைட்டிஹால் ரோடு வழியாக மீண்டும் ரங்கே கவுடர் வீதியை அடைந்தது. ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள், சமய பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் ஆடல், பாடல்களும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் துவங்கிய, அஹிம்சை தின ஊர்வலத்துக்கு, ஜெயின் சங்கத் தலைவர் நிகால்சந்த் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மிட்டா லால், கமல்சந்த், மகாவீர்சந்த், ரமேஷ்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர் நவரத்தன் மல் சாங்லா கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். ஊர்வலம், ஊட்டி ரோடு வழியாக பகவான் மகாவீர் கோவிலை அடைந்தது. மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் உள்ள, ஜெயின் சங்கத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஜெயின் சங்கத்தின் சார்பில், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. சிறுமுகை, அன்னுார் ரோட்டில் உள்ள முதியோர் இல்லங்கள், காரமடை அன்பு இல்ல முதியோர், குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கினர்.